சீஞியதிட நூல்களில் லட்சக்கணக்கான செய்திகள் காணக் கிடைக்கும். ஜோதிடச் செய்திகள், ஜோதிட பொழிப் புரை, ஜோதிட விளக்கம், ஜோதிட விதிகள், ஜோதிட விதிவிலக்குகள், ஜோதிடக் கணக்குகள் என ஒரு மனிதன் பிறந்தலிருந்து இறக்கும்வரை- ஏன், இறந்தபின் எங்கு செல்வான் எனவும் ஜோதிட விளக்கம் நிறைந்திருக்கும்.

Advertisment

அதிலும், பெண்கள் சம்பந்த மான விஷயங்களை மாங்கு மாங்கென்று எழுதியிருப் பார்கள். சில ஜோதிடக் குறிப்புகளைப் படிக்கும் போது சற்றே எரிச்சல் ஏற்படுவதுமுண்டு.

ருது ஜாதக விளக்கம் ருது காலத்தில் லக்னம் அல்லது 7-ல் செவ்வாய் நின்றால் பக்குவ காலத்திய ருதுவாம். லக்னம் அல்லது 7-ல் குரு நின்றால் விவாக கால ருதுவாம். லக்னம் அல்லது 7-ல் சுக்கிரன் நின்றால் சம்போக கால ருது வாம்.

amman

Advertisment

மேலும் ருதுவான நட்சத்திரப்பலன், கிழமைப்பலன், ருது வாரப் பலன் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ருதுவான லக்னத்தைக்கொண்டு எந்த இடத்தில், எந்த காலங்களில், எவ்வாறு ருது ஏற்படும் எனவும் கூறியுள்ளனர்.

ஆயினும், தற்காலத்தில் இந்த ருது ஜாதகம் தேவையா என சிந்திக்க வேண்டும். ஜாதகப் பலனை கால தேச வர்த்தமானம் அறிந்து கூறுதல் அவசியம் எனச் சொல்லியுள்ளனர்.

இந்த ருது ஜாதகம் பழங்காலத்திற்கு சரிப்பட்டு வந்திருக்கும். அக்காலத்தில் குழந்தை பிறந்த நேரத்தை சரியாகக் குறித்துவைக்க வசதி கிடையாது. மேலும் ஒவ்வொரு வீட்டிலும் 10, 15 குழந்தைகள் இருக்கும். குறைந்தபட்சமாகவே ஏழு குழந்தைகள் இருப்பார்கள். இதில் அந்த வீட்டுத் தலைவன், குடும்பத்தைக் காப்பாற்ற உழைக்கவே நேரம் சரியாக இருக்கும். மேலும் அநேக மக்களுக்கு எழுத் தறிவு கிடையாது. "குழந்தை எப்போ பொறந்தது?' என்றால், "விடியல்ல பொறந்தது' என்றோ, "அந்தி சாயுற நேரத்தில பொறந்தது' என்றோ ஒரு குத்துமதிப்பாகத்தான் கூறமுடிந்ததே தவிர, கடிகாரப் புழக்கமில்லாத காரணத்தால், குறிப்பாக இத்தனை மணி, இத்தனை நிமிடம், இத்தனை நொடி எனக் கூற இயலவில்லை.

Advertisment

ருது ஜாதகத்துக்கு இன்னொரு முக்கிய காரணம் அப்போது இருந்திருக்கிறது. வீட்டில் அத்தை, ஆச்சி, ஆத்தாக்கள் என ஒரு பெரிய வயதானவர்கள் கூட்டமே இருப்பார்கள். இவர்கள் வயதுக்குவரும் நிலையில் -திரளும் நிலையிலுள்ள பெண்ணுக்கு புத்திமதி கூறுவர். இப்படியிப்படி கண்டால், உடனே வீட்டு வயதான பெண்களிடம் கூறவேண்டு மென கண்டிப்பாகக் கூறிவிடுவர். இதில் இன்னொரு முக்கியமான விஷயம், பெற்ற தாயிடம் கூறக்கூடாதென்பது. அது அந்தப் பெண்ணின் மணவாழ்க்கைக்கு ஆகாதென்று ஒரு விதி வைத்திருந்தார்கள்.

ஆக, எந்த சிறு பெண்ணும், அவருக்கு ஏற்படும் வித்தியாசமான மாறுதலை, தன் வயது முதிர்ந்த உறவினரிடம் கூறுவாள். இது அவர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். சடங்கு, சம்பிரதாயம் செய்து, "எங்கள் வீட்டில் திருமணத்திற்குப் பெண் இருக்கிறாள்' என்றும் கூறுவதாக அமையும். ஆதலால் உடனே அதனைக் குறித்து வைத்துக்கொள்வர். அந்த ஊர் ஜோதிடரிடமும் குறித்துவைக்கச் சொல்வர். இதனால் ருது ஜாதகமென்பது சற்றே தெளிவான கணக்காக அமையும்.

இந்த இடத்தில், இந்த காலத்தில் உள்ளவர் களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். "குழந்தை பிறந்தவுடனேயும் இந்தமாதிரி ஜோதிடரிடம் சொல்லியிருக்கலாமே' என நினைக்கத் தோன்றும். ஆனால், அப்போது ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால், தாயும் சேயும் உயிருடன் மீண்டுவருவதே பெரிய கஷ்டம். மருத்துவ வசதியிராத காலமது. குழந்தை பிறந்த ஒரு மாத பொழுதிற்கு ஜன்னி வராமல் கவனமாகப் பார்த்துக்கொள்வதும் மிகக் கஷ்டம். இப்போதைய மருத்துவ முன்னேற்றத்திற்கு, பெண்ணாகப் பிறந்தவர்கள் மிக நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

மேலே சொன்ன காரணம் கொடுக்கும் பதட்டத்தில், குழந்தை பிறந்த நேரத்தை சரியாகக் குறித்துவைப்பது இயலாத ஒன்றாகி விட்டது. எனவேதான், கூடியவரை தெளிவாக, ஒழுங்காகக் கூறப்பட்ட ருது ஜாதகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

இப்போது குழந்தை பிறந்த நேரத்தை மருத்துவர்கள், மிகத்துல்லியமாகக் குறித்துக் கொடுக்கிறார்கள். எனவே பிறப்பு ஜாதகமே தற்போதைய காலகட்டத்தில் போதுமானது.

இன்னொரு முக்கியமான விஷயம்- இந்த கலிகாலத்தில் நிறைய அம்மாக்களுக்கு பெண் பருவமடைந்த விஷயமே தெரிவதில்லை. இளம்பெண்கள் அவர்களாகவே எல்லாவற்றை யும் பார்த்துக்கொள்கிறார்கள். அவர் களாகவே அம்மாவிடம், ""அம்மா, நான் ஏஜ் அட்டெண்ட் பண்ணிட்டேன்'' என்றோ, மற்ற ஆங்கில வார்த்தைகளிலோ சொன்னால் தான் உண்டு.

ஆகவே, குழந்தை பிறந்த துல்லியமான ஜாதகம் கிடைக்கும்போது, தெளிவற்ற ருது ஜாதகம் தேவையில்லை.

செல்: 94449 61845